மதுராந்தகம்,
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கடந்த 6-ந் தேதி இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் குருபூஜை, விநாயக பூஜை, சக்தி பூஜை, உள்ளிட்ட பூஜைகள் செய்து சித்ரா பவுர்ணமி சிறப்பு வேள்விக்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார்.
சித்தர் பீட வளாகம் முழுவதும் முக்கோணம் சதுரம், சாய்சதுரம், ஐங்கோணம், அறுகோணம், எண் கோணம், வட்டம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், சூலம்,
உள்ளிட்ட வடிவங்களில் 1,008 வேள்வி குண்டங்கள் அமைக்கும் பணியில் 1000-க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் ஈடுபட்டனர்.
சித்ரா பவுர்ணமியான நேற்று ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 8:30 மணிக்கு சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து செவ்வாடை பக்தர்கள் வரவேற்பளித்தனர். மாலை 3 மணி அளவில் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் வேள்வி சாலையில் கோ பூஜை செய்தார்.
இதனைத்தொடர்ந்து ஆதிபராசக்தி கருவறை முன்பாக நவதானியத்தால் அலங்கரிக்கப்பட்ட வட்டம், எண்கோணம் வடிவத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த பிரதான வேள்வி குண்டத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தீபாராதனை காட்டினார். இதனைத்தொடர்ந்து சித்தர் பீடம் வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்றில் இருந்து மக்கள் முழுமையாக மீண்டு சுபிட்சம் பெறுவதற்காக சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் ஐஸ்வரிய மேரு சக்கரம் அமைத்து மனித இனம் பஞ்சபூதங்களை போற்றி வணங்கி, முழு அமைதியை பெற்று வாழ்க்கை தெளிந்த நீரோடை போல அமையவும், தாய் தந்தையை மதித்து வணங்கி அவர்களின் ஆசியுடனும், பாசத்துடன் வாழவும் உலக நாடுகளில் வளமான மற்றும் அமைதியான சூழல் உருவாகவும், இந்திய நீர்நிலைகள் நிரம்பி எல்லா பகுதியிலும் செழிப்பான விவசாயம் பெருகவும், உலக பொருளாதாரம் மேம்படவும் அன்னை ஆதிபராசக்தியை வணங்கி வேள்வி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டீக்காராமன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகேசன், ராஜேஷ்வரன், முன்னாள் தேர்வாணைய குழு தலைவர் அருள்மொழி, தென்னிந்திய ரெயில்வே அதிகாரி செந்தில்குமார், ஓய்வுபெற்ற தென்னிந்திய ரெயில்வே அதிகாரி ஜெயந்த் உள்ளிட்ட ஏராளமான செவ்வாடை பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் மேற்பார்வையில்
தஞ்சை மாவட்ட தலைவர் வாசன், சக்தி பீட இணை செயலாளர் ராஜேந்திரன், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதிபராசக்தி பீட சக்திகள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.