அரியாங்குப்பம்,
கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் புதுவையில் இருக்கும்போது கிராமப்புறங்களில் அரசின் திட்ட பணிகள், நீர்நிலைகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி மத்திய அரசு நிதி உதவியுடன், சுற்றுலாத்துறை சார்பில் புதுவை கடற்கரை பகுதியில் நடைபெறும் கடற்கரை மேலாண்மை திட்ட பணிகளை கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு செய்தார். இதற்காக அவர் கவர்னர் மாளிகையில் இருந்து கார் மூலம் சின்னவீராம்பட்டினம் கடற்கரைக்கு அதிகாரிகளுடன் வந்தார். அங்கு ரூ.5 கோடியே 63 லட்சம் செலவில் நடைபெறும் சாலை, நடைபாதை, பூங்கா உள்பட பல்வேறு பணிகளை நடந்தே சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, இதுவரை நடைபெற்ற பணிகள், மேற்கொண்டு நடைபெற இருக்கிற பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கவர்னர் கேட்டறிந்தார். அதற்கு, திட்ட வரைபடம் மூலம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் சுண்ணாம்பாறு முகத்துவாரம், மீன் வளர்க்கும் குளத்தை கவர்னர் பார்வையிட்டார். கவர்னரின் வருகையை எதிர்பார்த்து அங்கு திரண்டிருந்த மீனவர்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. அதனை செய்துகொடுக்கவேண்டும், கடற்கரை மேலாண்மை திட்டத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய கவர்னர் கிரண்பெடி, கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மீனவர்கள் தான் பாதுகாப்பு. எனவே அவர்களுக்கு கடற்கரை மேலாண்மை திட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். புதுவைக்கு தற்போது வார இறுதி நாட்களில் தான் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடற்கரை மேலாண்மை திட்டம் நிறைவுபெற்றால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் கிராமப்புற சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா மேம்படும் என்றார்.
இதனை தொடர்ந்து புதுக்குப்பம் கடற்கரைக்கு கவர்னர் சென்றார். அங்கு நடைபெற்று வரும் கடற்கரை மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதன்பின்னர் நல்லவாடு, மணப்பட்டு ஆகிய கடற்கரைக்கு சென்றார். அங்கு கடற்கரை மேலாண்மை திட்ட பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. அந்த பணிகளை ஒரு மாதத்துக்குள் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.
மேலும் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கண்காணிப்பு கோபுரம், புறக்காவல் நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கவர்னர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குனர் முகமது மன்சூர், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.