ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் கடந்த 2 நாட்களாக இயங்கி வருகின்றன. 2-வது நாளான நேற்றும் காலை 10 மணிக்கு முன்னதாகவே கடைகளில் குடிமகன்கள் வரிசையில் வந்து நிற்கத்தொடங்கினார்கள். போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்தினர். குமலன்குட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் குடிமகன்களுக்கு அறிவிப்புகள் வழங்கி வரிசையை சீர் செய்தனர்.
டாஸ்மாக் மதுக்கடைக்கு வருபவர்கள் குடை எடுத்து வரவேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார். அதன்படி நேற்று ஏராளமானவர்கள் கைகளில் குடை பிடித்தபடி வந்து வரிசையில் நின்றனர். குடை மற்றும் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று சில கடைகளில் கட்டாயப்படுத்தியதால் குடை கொண்டு வராத சிலர் திரும்பி சென்றனர். குடை கொண்டு வந்து மதுவாங்கிய சிலர், குடை இல்லாதவர்களுக்கு தங்கள் குடைகளை கொடுத்து, அவர்களும் மதுவாங்க உதவி செய்தனர்.
ஈரோடு திருநகர் காலனி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வழக்கம்போல கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது முகக்கவசம் இல்லாமல் நின்று கொண்டிருந்த குடிமகன்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கினார்.
ஒரு சில கடைகளில் எந்த கட்டுப்பாடும் இன்றி மதுவிற்கப்பட்டது. காலை முதல் மாலை வரை குடிமகன்கள் கூட்டம் சீராக இருந்தது. முதல் நாளில் இருந்த அளவுக்கு கூட்டம் நேற்று இல்லை.