மாவட்ட செய்திகள்

அரசு அதிகாரி என கூறி காண்டிராக்டரிடம் ரூ.2¾ கோடி மோசடி; வாலிபர் கைது

அரசுத்துறைகளில் ஒப்பந்தங்கள் பெற்று தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.2 கோடியே 73 லட்சம் மோசடி செய்ததாக திருமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

விருதுநகர்,

சாத்தூர் அருகே உள்ள என்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). இவர் இருக்கன்குடி கோவிவில் ஒப்பந்த வேலைகள் செய்து வந்த போது சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக டிரைவர் ராஜபாண்டியன் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது உறவினர் சரவணக்குமார் (34) என்பவர் சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாகவும் அவர் பலருக்கு அரசு துறைகளில் ஒப்பந்த பணிகள் பெற்று தந்துள்ளதாகவும் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கண்ணனுக்கு சாத்தூரில் வைத்து சரவணக்குமாரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதை நம்பி கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கண்ணன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வேலை வாங்கி தர வேண்டும் என கூறி பல தவணைகளாக சரவணக்குமாரிடம் ரூ.2 கோடியே 73 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சரவணக்குமார் ஒப்பந்த பணிகளோ அல்லது வேலையோ பெற்று தர வில்லை.

இதனை தொடர்ந்து கண்ணன், சரவணக்குமாரை பற்றி சென்னை சென்று விசாரித்த போது சரவணக்குமார் அரசு பணியில் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் சரவணக்குமார், கண்ணனிடம் பெற்ற பணத்தின் மூலம் அழகர்கோவில், தோப்பூர் பகுதிகளில் நிலங்கள் வாங்கியதுடன் 4 சொகுசு கார்களும் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும் சரவணக்குமாரின் இந்த மோசடியில் அவர் தந்தை திருவள்ளுவனும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து கண்ணன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததுடன் தென் மண்டல ஐ.ஜி. முருகனிடம் புகார் மனு கொடுத்தார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரவணக்குமார், அவரது தந்தை திருவள்ளுவன் ஆகிய இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் சரவணக்குமாரை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தை திருவள்ளுவனை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது