முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிக்குளம் ரெயில்வே நிலையம் அருகில் புதிதாக போடப்பட்ட தார்சாலை உள்ளது. இந்த தார்சாலையில் திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிக்காக களி மண் கொட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனை கண்டித்தும், இந்த களி மண்ணை உடனடியாக அகற்ற கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று நாச்சிக்குளம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார், ரெயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுமுக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.