பெங்களூரு,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சாயன்(வயது 30), கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரும், கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயரும் கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றினார்கள். அப்போது சாயனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்தனர். அப்போது சாயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு அந்த பெண் பிரிந்து விட்டார்.
அதன்பிறகு, வேறு ஒரு நபரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு பெங்களூரு விவேக்நகர் அருகே தனது கணவருடன் அந்த பெண் வசித்து வருகிறார். இதுபற்றி அறிந்த சாயன் பெங்களூருவுக்கு வந்தார். மேலும் கடந்த மாதம்(மே) 30-ந் தேதி அந்த பெண்ணை சந்தித்து சாயன் பேசினார். அப்போது அவரது செல்போன் எண்ணை சாயன் வாங்கினார்.
ஆபாச வீடியோவை அனுப்புவதாக...
இந்த நிலையில், தன்னுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களை கணவருக்கு அனுப்பி வைத்து விடுவதாக அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி சாயன் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, அவருக்கு சாயன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விவேக்நகர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்ப்யூட்டர் என்ஜினீயரான சாயனை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.