திருவரங்குளம்,
திருவரங்குளத்தில் அரங் குளநாதர் சமேத பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருவிழாவில் இரண்டாம் மண்டகப்படி தார்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இரண்டாம் மண்டகப்படி, நடத்துவதில் இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. திருவரங்குளத்தில் இருந்து சாமி வம்பன் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு இருபிரிவினரிடையே இரண்டாம் மண்டகப்படி நடத்துவதில் போட்டி ஏற்பட்டதால் வம்பன் கிராமத்திற்கு சாமியை எடுத்து செல்லவில்லை. மேலும் சாமியை தூக்காமல் இரண்டு பிரிவினரும் சென்றுவிட்டனர். இது சம்பந்தமாக ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
அதைதொடர்ந்து இந்த ஆண்டும் இரண்டாம் மண்டகப்படி நடத்துவதில் இருபிரிவினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு பிரிவினர் இரண்டாம் மண்டகப்படி நடத்துவதில் எங்களுக்கும் உரிமை உள்ளது. அதை பெற்றுத் தர வேண்டும் என்று கூறி அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டத்தில் அதுவும் தோல்வியில் முடிந்ததையடுத்து, ஒரு தரப்பினர் வம்பன் நால் ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டனர். சிறிது நேரம் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.