புதுச்சேரி
புதுவையில் கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் நடந்து வருகிறது. ஒரு சமயத்தில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பதும், பின்னர் சில காலம் சமாதானமாக போவதும் மீண்டும் மோதுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கவர்னர் கிரண்பெடி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்ளுமாறு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
தற்போது கவர்னருக்கும் அமைச்சரவைக்கும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் இதில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் விருந்தை புறக்கணித்ததால் கவர்னர் கிரண்பெடி அதிர்ச்சியடைந்தார். இந்தநிலையில் நேற்று காலை யாரும் எதிர்பாராத விதமாக சைக்கிளில் கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டிற்கு வந்தார்.
அங்கு அவர் முதல்-அமைச்சரை சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவரிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தான் வழக்கமாக பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை எனவும் பிறந்தநாளில் வெளியூர் செல்வதாகவும் தெரிவித்தார்.
அதன்பின் கவர்னர் கிரண்பெடியை அவர் வீட்டுவாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி கந்தப்ப முதலி தெருவில் உள்ள சபாநாயகர் வைத்திலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தனது 2 ஆண்டு பணிகள் முடிந்தது குறித்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.