கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்ட அளவில் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரனுக்கு முதல் தடுப்பூசியை செவிலியர்கள் போட்டனர்.
தொடர்ந்து துணை முதல்வர் டாக்டர் சாந்தாராம், கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அழகேசன், டாக்டர்கள் ராமசுப்பிரமணியன், முகம்மது ரபீக், சரவணன் உள்ளிட்டோருக்கு ஊசி போடப்பட்டது.
4 வகை
பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2, 8 ஆகிய தேதிகளில் தடுப்பூசி ஒத்திகை 8 இடங்களில் நடைபெற்றது. இந்த தடுப்பூசியானது 4 வகையாக பிரிக்கப்பட்டு போடப்படும். நோய் அதிகம் தாக்கப்படுபவர்கள் கண்டறிந்து அதன் அடிப்படையில் தடுப்பூசி நான்கு வகையாக பிரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.
முதல் கட்டமாக சுகாதார பணியாளருக்கும், 2-ம் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 50 வயதிற்கு குறைவான நாள்பட்ட தொற்று நோய் உள்ளவர்களுக்கும், 4-ம் கட்டமாக அனைத்து பொதுமக்களுக்கும் படிப்படியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
இந்த தடுப்பூசி சுய விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும் ஒருவர் தன்னை பாதுகாப்பதற்கும், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது ஆகும். ஏற்கனவே கொரோனா நோய் பாதித்த நபரும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம்.
இந்த ஊசி தனிநபருக்கு 2 முறை போடப்படும். முதல் முறை ஊசி போட்ட பின் 28 நாட்கள் கழித்து அதே நபருக்கு 2-வது தடுப்பூசி போடப்படும். இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டு 2 வாரங்களுக்கு பிறகு உடலின் பாதுகாப்பு அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி முறையாக கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் அவசியம்.
சுகாதார பணியாளர்கள்
நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா 100 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி திட்டத்திற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 20,963 சுகாதார பணியாளர்கள் விவரங்கள் ஒரு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் இப்பணிக்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு 15,100 தடுப்பூசி மருந்துகள் வரப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 7,550 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து தேவைக்கேற்ப மாநில தடுப்பு மையத்தில் இருந்து தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு தொடர்ந்து அனைவருக்கும் போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பக்க விளைவு ஏற்படாது
முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கூறும்போது, 'எனக்கு முதல் நபராக இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊசி போட்டு கொண்ட பிறகு வலி கூட தெரியவில்லை. அனைத்து தரப்பினரும் அச்சமின்றி இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. இந்த தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது. தடுப்பூசி போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்படும்' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்பட 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் இந்த திட்டத்தை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். அரசு டாக்டர் ரஜினிகாந்த் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவரை தொடர்ந்து டாக்டர்கள் கீதா, லதா, சொர்ணலதா, அகத்தியன், அனிதா பாலின், விஜயகுமார், ஜோஸ் ஆண்ட்ரூ வளன்ராய் ஆகியோர் போட்டுக் கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 5,100 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது என்றார்.
இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன், துணை இயக்குனர் கலுசிவலிங்கம், தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.