திருப்பூர்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி வருகிற 17-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பலர் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மராட்டியத்தில் இருந்து திருப்பூருக்கு வந்த 17 பேருக்கு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த 17 பேர் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இவர்கள் போக்குவரத்து முடக்கத்தின் காரணமாக தங்களது சொந்த ஊரான திருப்பூருக்கு வர முடியாமல் இருந்தனர்.
இதன் பின்னர் அரசு உதவியுடன் பஸ் மூலம் 17 பேரும் மராட்டியத்தில் இருந்து திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை திருப்பூரை வந்தடைந்த அவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரின் விவரங்கள் மற்றும் முகவரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்களது பரிசோதனை முடிவு தெரியவரும். மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.