தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கீழ்செட்டிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சாந்தி (வயது 55). இவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவரை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் கொண்டு சென்றனர்.
இந்த கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு சுமார் 1 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். சுடுகாட்டிற்கு 100 மீட்டர் முன்பு இடைவெளியில் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு பட்டா நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விவசாய நிலத்தின் வழியாக பிணத்தை எடுத்து சென்றவர்கள் வாழை மரம் போன்றவற்றை சேதம் செய்து உள்ளனர். இதனால் அவர் பிணத்தை வண்டியில் கொண்டு செல்ல கூடாது, கையில் தான் தூக்கி வர வேண்டும் என்று பாதையில் அவரது டிராக்டரை நிறுத்தினார்.
இதையடுத்து பிணத்தை தூக்கி வந்தவர்கள் திருவண்ணாமலை- தண்டராம்பட்டு சாலையில் இரவு சுமார் 8.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த உதவி கலெக்டர் தங்கவேலு, தண்டராம்பட்டு தாசில்தார் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பிணத்தை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.