தேனி:
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றால புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகிய மூன்றும் தவறாமல் இடம் பெறும். தேனியில் உள்ள கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக புத்தாடை வாங்கவும், பட்டாசு வாங்கவும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், பேக்கரிகள், பட்டாசு கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
தேனி நகரின் முக்கிய கடை வீதியான பகவதியம்மன் கோவில் தெரு, எடமால் தெரு ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. மதுரை சாலை, பெரியகுளம் சாலைகளில் உள்ள கடைகளிலும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் இந்த சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த சாலைகளில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
போக்குவரத்து நெரிசல்
தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பொருட்கள் வாங்க குவிந்ததால் தேனியில் பிரதான சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்தது. காலையில் இருந்து இரவு வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி நகருக்குள் கடந்து சென்றன. குறிப்பாக மாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கம்பம் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
கடைவீதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேனி, கம்பம், போடி, சின்னமனூர், பெரியகுளம் உள்பட மாவட்டத்தின் முக்கிய நகர்பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பஸ் நிலையம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதாலும், பொருட்கள் வாங்க வெளியூர்களில் இருந்து பலரும் தேனிக்கு வந்ததாலும் தேனி பழைய பஸ் நிலையம், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறினர். நீண்ட தூர பயணங்களுக்கு கூட பஸ்களில் நின்றுகொண்டே பயணிக்கும் நிலைமை ஏற்பட்டது.
கடைவீதிகள், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதிய நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளி எங்கும் கடைபிடிக்கப்படவில்லை. கூட்டம், கூட்டமாக உலா வந்த மக்களில் பலரும் முக கவசம் அணியவில்லை. இது கொரோனா பரவலை மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் ஆய்வு
தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்த இடங்களில் பலரும் முக கவசம் அணியாமல் உலா வந்தனர். இதைப் பார்த்த கலெக்டர், முக கவசம் அணியாதவர்களை கண்டித்தார். தேனி நகரில் ஒலிபெருக்கி மூலம் முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.