கடலூர்,
பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான காடுவெட்டியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் அவரது உருவம் அச்சிடப்பட்ட டிஜிட்டல் போர்டுகளை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பா.ம.க.வினர் காடுவெட்டிக்கு சென்று உள்ளனர்.
இதற்கிடையே ஜெ.குருவின் மறைவை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இதில் கே.வி.குறிச்சி பகுதியில் ஒரு பஸ்சும், சேத்தியாத்தோப்பு பகுதியில் 4 பஸ்களும், கடலூர் செம்மண்டலத்தில் ஒரு பஸ்சும், நடுவீரப்பட்டில் ஒரு பஸ்சும், நெல்லிக்குப்பத்தில் 2 பஸ்களும், பண்ருட்டியில் 2 பஸ்களும், காட்டுமன்னார்கோவில், ரெட்டிச்சாவடி பகுதியில் தலா ஒரு பஸ்சும், சிதம்பரத்தில் 2 பஸ்கள் என 15 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது.