திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நீலகண்டன் (வயது 24). நேற்று முன்தினம் நீலகண்டன் அதே பகுதியில் உள்ள நண்பரின் பாட்டியின் சாவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது அந்த வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நீலகண்டன் அமர்ந்திருந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நீலகண்டன் தன்னுடைய வீட்டுக்கு வந்து விட்டார்.
வாலிபருக்கு வெட்டு
பின்னர் சிவராஜ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான பாபு, வினோத், ராஜ் என்கிற ராஜமாணிக்கம் ஆகியோருடன் சென்று வீட்டில் இருந்த நீலகண்டனை வெளியே அழைத்து தகாத வார்த்தையால் பேசி, கையால் தாக்கி தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரது முதுகு மற்றும் காலில் வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நீலகண்டன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாபு, சிவராஜ், வினோத், ராஜமாணிக்கம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.