தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கடந்த ஆண்டு குறுவை சாகுபடியில் நல்ல விளைச்சல் இருந்ததால் மகசூல் அதிகமாக கிடைத்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் எதிர்பார்த்த இலக்கையும் தாண்டி நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
குறுவை சாகுபடி நல்ல முறையில் கை கொடுத்த காரணத்தினால் விவசாயிகள் ஆர்வத்துடன் சம்பா, தாளடி சாகுபடியை மேற்கொண்டனர். இலக்கை மிஞ்சி 3 லட்சத்து 42 ஆயிரத்து 867 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. பயிர்களும் நல்ல முறையில் விளைந்து வந்த நேரத்தில் புரெவி, நிவர் என அடுத்தடுத்து புயல் ஏற்பட்டு கனமழை பெய்தது.
அழிவை சந்தித்த விவசாயிகள்
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. பின்னர் மழை நின்றவுடன் வயல்களில் தேங்கி நின்ற தண்ணீரை வடிய வைத்து, நெற்பயிரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதன்பிறகு தஞ்சை மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக விவசாயிகள் பெரும் அழிவை சந்தித்துள்ளனர்.
மாவட்டத்தில் பரவலாக முன் பட்ட சம்பா சாகுபடி விளைந்த நெற்பயிர்கள், அடுத்த ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள், வேரோடும், அடியோடும் சாய்ந்து நீரில் மூழ்கி பயிர்கள் முளைத்து வருகின்றன. இதனை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்து பின்பட்ட சம்பா சாகுபடி, பூக்கும் தருவாயில் தொடர் மழையினால் நெல் பயிர்கள் பதராக மாறிவிட்டது. இவ்வாறாக மாவட்டம் முழுவதும் நெல் சாகுபடி விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அறுவடை
இந்தநிலையில் தொடர் மழைக்கு முன்பாக புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை விவசாயிகள் அவசர, அவசரமாக அறுவடை செய்தனர். அப்படி அறுவடை செய்த நெல்களை ஈரத்துடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று கொட்டி வைத்தனர். மழை பெய்யாமல் இருக்கும் எனவும், கொள்முதல் நிலையத்திலேயே நெல்லை காய வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் விவசாயிகள் பலர், நெல்லை கொட்டி வைத்து தார்பாய் மூலம் மூடி வைத்து இருந்தனர்.
ஆனால் அதன்பிறகு பெய்த தொடர் மழையினால் நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். மேலும் தார்பாய் மூலம் மூடி வைத்து இருந்தாலும் மழைநீர் உட்புகுந்ததால் ஏற்கனவே ஈரமாக இருந்த நெல்மணிகள் கூடுதலாக நனைந்தது. நெல் ஈரப்பதமாக இருந்ததால் நெல் கொள்முதல் செய்யும் பணியும் நடைபெறவில்லை. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யவில்லை.
தவிக்கும் விவசாயிகள்
இதனால் நெல்லை காய வைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை விவசாயிகள் எடுத்தபோது, நெல்மணிகள் முளைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வயல்களில் கிடந்தால் வீணாகிவிடும் என அறுவடை செய்யப்பட்ட நெல்லும் முளைத்து வீணாகி உள்ளதை பார்த்து செய்வது அறியாமல் விவசாயிகள் தவித்தனர்.
தஞ்சையை அடுத்த காட்டூர், பொன்னாப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் முளைத்ததால் அவைகளை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு முளைக்காத நிலையில் ஈரப்பதத்துடன் காணப்படும் நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
கோரிக்கை
தஞ்சையை அடுத்த மடிகை, துறையூர் பகுதிகளில் சாலையோரங்களில் நெல்லை கொட்டி காய வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். இப்படி அடிமேல், அடி வாங்கி கொண்டிருக்கும் தங்களது வாழ்வாதாரத்தை காக்க ஈரப்பதத்தை தளர்த்தி நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
இந்த நிலயில் தஞ்சக்கு ஓசூல் இருந்து நல்ல உலாத்தும் எந்திரம் காண்டு வரப்பட்டு உள்ளது.
இது குறித்து வாளமரக்கோட்டையை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவியான பெண் விவசாயி மனோன்மணி கூறும்போது, அறுவடை செய்து 15 நாட்களாக நெல்லை குவித்து வைத்துள்ளோம். ஒரு மணிநேரத்திற்கு ரூ.2,600 வாடகை கொடுத்து எந்திரம் மூலம் அறுவடை செய்தோம். 4 ஏக்கருக்கு நடவு செலவு, உரம், அறுவடை செலவு என ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் அறுவடை செய்த நெல் எல்லாம் வீணாகிவிட்டது. நெல்லை காய வைக்க 9 தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துள்ளோம். ஒருவருக்கு தினமும் ரூ.500 கூலி வழங்க வேண்டும். அதுபோக சாப்பாடு செலவு தனி. இவைகள் எல்லாம் கூடுதல் செலவுகள் தான். எனவே ஈரப்பதத்தை காரணம் காட்டாமல் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.