மாவட்ட செய்திகள்

கண்மாய்களை தூர்வார மக்கள் உதவ வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

கண்மாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு உதவி செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேனி,

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் புதுக்குளம் கண்மாய் தூர்வாரும் பணி, போடி அருகே நாகலாபுரம் ஊருணி தூர்வாரும் பணி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட குளங்களில் உள்ள வரத்து வாய்க்கால்கள், கால்வாய்கள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 126 கண்மாய்கள் உள்ளன. இதில் 55 கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 71 கண்மாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் 204 கண்மாய்களில் 80 கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 124 கண்மாய்களை தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளம் மற்றும் கண்மாய் பராமரிப்பு பணிகளை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் பொதுமக்கள், தன்னார்வ ஆர்வலர்கள், விவசாயிகள் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியோ அல்லது எந்திரங்களையோ, உழைப்பினையோ வழங்கிட முன்வர வேண்டும். இதன்மூலம் நீர்வள ஆதாரங்களை தூர்வாரி பாதுகாப்பதன் மூலம் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைக்கு நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்