இந்த ஆய்வின் போது, கல்யாணபுரம் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறைகளை நேரடியாக உள்ளே சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், பொது சலவை மேற்கொள்ளும் பகுதிகளில் தூய்மையாக பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
மேலும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற, தீவிர தூய்மைப்பணி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவித்தார். அதேபோன்று பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், அதில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டார். கழிவறை தூய்மை பணிகள், கரையோரம் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல் ஆகிய பணிகளை அடுத்த ஒரு வார காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கல்யாணபுரம் பகுதியை தூய்மைப்படுத்தி சுகாதாரத்துடன் பராமரிக்கவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வடக்கு வட்டார துணை கமிஷனர் பி.ஆகாஷ், மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.