நெல்லை,
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கலெக்டர் ஷில்பா, மாற்றுத்திறனாளிகள் இருந்த இருக்கைக்கு சென்று ஒவ்வொருவரிடமும் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினார்கள். நடக்க முடியாமல் வந்த 75 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு உடனடியாக 3 சக்கரசைக்கிள் வழங்கப்பட்டது. இதேபோல் காதுகேளாத மாணவி ஒருவருக்கு உடனடியாக காதுகேட்கும் கருவி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை அதிகாரிகள் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவேண்டும். வீணாக அவர்களை அலையவிடக்கூடாது அவர்களுடைய தேவைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்யும். மாற்றுத்திறனாளிகள் எப்போதும் உற்சாகமாக இருந்து தங்களுடைய வேலைகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்வு தள நடைமேடை உள்ள கதவு மூடப்பட்டு இருந்ததால் முன்பக்க வாசல் வழியாக உள்ளே சிரமப்பட்டு வந்தனர். சிலர் வாசலில் உட்கார்ந்து இருந்தனர். இந்த தகவலை அறிந்த கலெக்டர், அந்த வாசலை திறந்துவிடுமாறு கூறினார். அந்த கதவு திறக்கப்பட்டதும் அந்த வழியாக உள்ளே வந்தனர்.