ஆம்பூர்,
ஆம்பூர் நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த சோ.பார்த்தசாரதி கடந்த 4-ந் தேதி இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உயர் அதிகாரியின் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததாகவும், அதற்குரிய காரணத்தை கேட்டபோது அவருக்கும், உயர் அதிகாரிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒழுங்கின்மை, கீழ்படிந்து நடக்கவில்லை போன்ற காரணங்களுக்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆம்பூர் நகராட்சி ஆணையாளராக பார்த்தசாரதி பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். மேலும் பொதுமக்களின் புகாருக்கு உடனுக்கு உடன் நடவடிக்கை எடுத்து வந்ததால், ஆணையாளரின் பணியிடை நீக்கத்திற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே ஆம்பூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆணையாளருக்கு ஆதரவாக நேற்று காலை 6.30 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆணையாளரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும், அவரை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் போட்டனர். அப்போது நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்களை சமாதானப்படுத்தினர். அதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.