கும்பகோணம்,
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அனிதா இறப்பிற்கு நீதி வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் 7-வது நாளாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்திய மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.