ஓசூர்,
தமிழக அரசின் உத்தரவுப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சூளகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சூளகிரியில் தனியார் நர்சரி பண்ணையில் பிளாஸ்டிக் கழிவுகளில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே பகுதியில் தனியார் கிரானைட் நிறுவனத்தில் அதிகமாக கழிவுபொருட்கள் மற்றும் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ளதை கண்டறிந்த கலெக்டர் கதிரவன், அந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஓசூர் மோரனப்பள்ளி ஊராட்சி சிப்காட் - 2 பகுதியில் இயங்கி வரும் உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பழைய இரும்பு டப்பாக்கள், பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் மற்றும் கழிவுகள் அதிகம் இருந்ததையும் கண்டறிந்த மாவட்ட கலெக்டர், அவற்றை அகற்ற உத்தரவிட்டு அந்த நிறுவனத்திற்கு ரூ.8 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் நிறுவனம் சார்பாக புகைபோக்கி எந்திரம் பெற்று அவ்வப்போது தூய்மை பணிகளை செய்து கொள்ள வேண்டும், என உத்தரவிட்டார்.
அதே போல மற்றொரு தனியார் நிறுவன வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ள இரு குட்டைகளில் ஆய்வு செய்து அதில் கொசுப்புழுக்கள் அதிகம் இருந்ததை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பவுடர் தயாரிக்கும் மற்றொரு நிறுவனத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்கள் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போல பழைய டயர்கள், டப்பாக்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்க வைத்து டெங்கு காய்ச்சல் பரப்பக்கூடிய கொசுப்புழுக்கள் உருவாக காரணமாக இருந்த மேலும் 2 நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓசூர், சூளகிரி பகுதிகளில் தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் கதிரவன், டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த மொத்தம் 30 நிறுவனங்களுக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக விதித்து நடவடிக்கை எடுத்தார். அப்போது ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம், தாசில்தார் பூசண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.