திண்டுக்கல்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 4-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து வேட்புமனுக்களை பெறுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் தலா 12 வார்டுகள் வீதம் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன.
வேட்புமனு தாக்கல் தொடக்கம்
இதேபோல் 3 நகராட்சிகளில் 75 வார்டுகள், 23 பேரூராட்சிகளில் 363 வார்டுகள் இருக்கின்றன. இதன்மூலம் மொத்தம் 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுவை பெறுவதற்கு 27 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 60 உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் காலையில் இருந்தே தயார் நிலையில் இருந்தனர். ஆனால் மாவட்டம் முழுவதும் இன்று ஒரு வேட்பாளர் கூட தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடின. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யாதது தேர்தல் அதிகாரிகளை திகைப்படைய செய்தது.
விண்ணப்பங்கள் வாங்க ஆர்வம்
அதே நேரம் வேட்புமனு விண்ணப்பங்களை வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு விண்ணப்பங்களை வாங்குவதற்காக இன்று காலை ஏராளமானோர் குவிந்தனர். இன்று மட்டும் 413 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.