மாவட்ட செய்திகள்

காவிரி மகா புஷ்கர விழாவில் பக்தர்கள் புனித நீராடினர் ஜெ. தீபா, கணவருடன் பங்கேற்றார்

ஸ்ரீரங்கத்தில் நடந்து வரும் காவிரி மகா புஷ்கர விழாவில் இதுவரை 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். 10-வது நாள் நிகழ்ச்சியில் ஜெ. தீபா தனது கணவருடன் பங்கேற்றார்.

தினத்தந்தி

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. குருபகவான் காவிரி நதிக்குரிய துலாம் ராசியில் பிரவேசித்ததையொட்டி நடந்து வரும் இந்த விழாவில் பங்கேற்று காவிரியில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இதனால் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து குவிந்தனர். அவர்கள் அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மற்றும் சிறப்பு பூஜைகளில் பங் கேற்றனர்.

மேலும் தினமும் மாலை நேரங்களில் காவிரி தாய்க்கு தீபாராதனை காட்டும் நிகழ்ச்சிகளும் நடந்தன. புஷ்கர விழாவுக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. புஷ்கர விழாவில் பங்கேற்ற பக்தர்கள் காவிரியில் புனித நீராடினார்கள். இதுவரை சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக விழா கமிட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். காவிரி மகா புஷ்கர விழாவின் 10-வது நாளான நேற்றும் வழக்கம் போல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மகா புஷ்கரத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஜீயர்கள் கலந்து கொண்ட உபனியாச நிகழ்ச்சி நடந்தது. நாளையுடன் (சனிக்கிழமை) காவிரி மகா புஷ்கர விழா நிறைவு பெறுகிறது. நாளை மாலை தீபாராதனைக்கு பின்னர் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ. தீபா நேற்று தனது கணவர் மாதவனுடன் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தார். அங்கு சில சடங்குகளை செய்து விட்டு காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக பூக்களை தீபா காவிரியாற்றில் விட்டார். பின்னர் ஆற்றில் இறங்கி கால் நனைத்து தலையில் தண்ணீர் தெளித்து கொண்டார். யாகசாலை பூஜையிலும் பங்கேற்ற தீபா பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். ரெங்கநாதர், தாயார், வெளியாண்டாள் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்