மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் காவிரி ஆற்றில் நேற்று பக்தர்கள் புனித நீராடினார்கள். அணைக்கட்டு முனியப்பன் சாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தினத்தந்தி

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி தமிழகம் வழியாக பாய்ந்தோடி கடலில் கலக்கிறது. பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கவும், வெள்ள சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் மேட்டூர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தி பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. விவசாயத்திற்கு இன்றியமையாத தண்ணீரை அளிக்கும் காவிரி தாயை ஆடிப்பெருக்கு அன்று விவசாயிகள் வழிபாடு செய்வார்கள். இதுமட்டுமின்றி பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆடிப்பெருக்கு அன்று காவிரி பாய்ந்தோடும் பகுதிகளுக்கு சென்று புனித நீராடி காவிரி அன்னையை வழிபாடு செய்வார்கள்.

பக்தர்கள் புனித நீராடினார்கள்

இதன் அடிப்படையில் ஆடிப்பெருக்கான நேற்று ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிகாலையில் இருந்தே மேட்டூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். இவர்கள் மேட்டூர் காவிரி பாலம், அணைக்கட்டு முனியப்பன் கோவில், மேட்டூர் அனல்மின்நிலைய புதுப்பாலம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் புனிதநீராடினார்கள். புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், வளத்தையும் அளிக்க வேண்டும் என காவிரி தாயை வழிபட்டு புனித நீராடி தங்கள் இல்லங்களுக்கு திரும்பி சென்றனர்.

ஒரு சிலர், காவிரியில் புனித நீராடிய பிறகு, மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு பொங்கல் வைத்து முனியப்பனை வழிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உணவு சமைத்து பூங்காவிற்கு எடுத்து சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

ஆடிப்பெருக்கையொட்டி மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்கள், மேட்டூர் அரசு ஆஸ்பத்திரி வரை அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பவானி மெயின்ரோட்டுக்கு செல்லுமாறு வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. கொளத்தூர் செல்லும் பஸ்கள் பொன்னகர், குள்ளவீரன்பட்டி வழியாக இயக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

நகராட்சி சார்பில் காவிரி ஆற்றின் கரைகளில் தற்காலிக கழிப்பிடங்கள், உடை மாற்றும் அறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இதையொட்டி மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு பணி, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடிப்பெருக்கையொட்டி, மேட்டூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் தூக்கணாம்பட்டி நகராட்சி பள்ளியிலும், மேட்டூர் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது