மாவட்ட செய்திகள்

மகா புஷ்கர விழாவின் 6-வது நாள் புனித நீராடுவதற்காக காவிரி கரையில் குவிந்த பக்தர்கள்

மகா புஷ்கர விழாவின் 6-வது நாளையொட்டி புனித நீராடுவதற்காக பக்தர்கள் குவிந்தனர். இதனால் காவிரியின் அனைத்து படித்துறைகளும் நிரம்பி வழிந்தன.

திருச்சி,

காவிரி மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. குருபகவான் காவிரி நதிக்குரிய துலாம் ராசியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரவேசித்தாலும், பஞ்சாங்கப்படி 144 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு பிரவேசிப்பதாக ஐதீகப்படி நம்பப்படுவதால், மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் விழாவுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

யாகசாலை பூஜைகள்

ஒவ்வொரு நாளும் அம்மா மண்டபம் படித்துறை அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும், இரவில் காவிரி தாய்க்கு மங்கள ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. யாக சாலை பூஜைகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 108 வைணவ தலங்களில் இருந்து வந்துள்ள ஜீயர்கள் மற்றும் துறவிகளும் இந்த யாகங்களில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

பக்தர்கள் குவிந்தனர்

காவிரி மகா புஷ்கர விழாவின் 6-வது நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதத்தின் முதல் நாள் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த பக்தர்கள் காவிரியில் புனித நீராடினார்கள். காவிரியில் தற்போது தண்ணீர் அதிக அளவில் செல்வதால் அம்மா மண்டபம் படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளிலும் நேற்று பக்தர்கள் புனித நீராடினார்கள். இது தவிர வீரேஸ்வரம் படித்துறை, மாம்பழச்சாலை படித்துறை, மற்றும் அய்யாளம்மன் படித்துறை, சிந்தாமணி படித்துறை, ஓடத்துறை உள்பட அனைத்து படித்துறைகளும் நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்களின் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.

23-ந்தேதி வரை...

புனித நீராடிய பக்தர்கள் யாகசாலையில் பிரசாதங்களை வாங்கி கொண்டு ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று ரெங்கநாதர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகளில், காவிரி ஆற்றில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை செய்தனர். போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். வருகிற 23-ந்தேதி வரை தொடர்ந்து காவிரி மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்