கிருஷ்ணகிரி,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரில் சிலர் சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் கடைகள் வைத்திருப்பதாகவும், அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பதாகவும் கலெக்டர் பிரபாகருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகி, நகராட்சி ஆணையாளர் சந்திரா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் தலைமையில் போலீசார், வருவாய்த்துறையினர் நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிகளை மீறி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினார்கள். மேலும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து உதவி கலெக்டர் தெய்வநாயகி கூறியதாவது:-
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சிலர் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்து வருகிறார்கள். ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கூறினார்.