மாவட்ட செய்திகள்

நாயை அடித்ததால் தகராறு: வாலிபர் சரமாரி குத்திக்கொலை 6 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

ஆண்டிப்பட்டி அருகே நாயை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் நவீன்குமார் (வயது 27). பொங்கல் பண்டிகையன்று இரவு இவர், குள்ளப்புரம் கிராமத்தை சேர்ந்த செல்வமணி (29), பிரபு பாண்டி (27) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஒரு நாயை நவீன்குமார் அடித்துள்ளார். இதைக்கண்ட செல்வமணியின் உறவினர் அம்மாசி என்பவர் வாயில்லாத ஜீவனை எதற்காக அடிக்கிறாய் என்று கேட்டார். அப்போது அவரையும், நவீன்குமார் தாக்கி தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதுகுறித்து அம்மாசி, செல்வமணியிடம் நேற்று முன்தினம் காலை கூறினார். உடனடியாக செல்வமணி, நவீன்குமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார். அப்போது, அவரையும், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நவீன்குமார் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வமணி, தனது உறவினர்கள், நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு டி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு சென்று, நவீன்குமாரை தேடி பார்த்தார். அப்போது அங்குள்ள மயானத்தில் நவீன்குமார், தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த ராஜா, ஜெகதீஸ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

இதை பார்த்த செல்வமணி, செல்போனில் அவதூறாக பேசியது குறித்து கேட்டார். இதில் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செல்வமணி மற்றும் அவருடன் வந்த உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து நவீன்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் ராஜா, ஜெகதீஸ் ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். ராஜா, ஜெகதீஸ் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது செல்வமணி, இவரது அண்ணன் நேசமணி (30), பிரபு பாண்டி, குள்ளபுரத்தை சேர்ந்த கார்த்திக் (19), தங்கப்பாண்டி (18), சிவக்குமார் (20), முத்துமாரி (30), டி.அணைக்கரைபட்டியை சேர்ந்த மனோஜ் (20) ஆகியோருடன் சேர்ந்து நவீன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செல்வமணி, பிரபுபாண்டி, நேசமணி, கார்த்திக், முத்துமாரி, மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான தங்கப்பாண்டி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது