திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் 2 தவணைகளில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இந்த மாதமும், அடுத்த மாதமும் (ஜூன்) தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த நிவாரணத்தொகை வருகிற 15-ந்தேதி முதல் ரேஷன்கடைகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதோடு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது.
இதற்காக நேற்று மாநிலம் முழுவதும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 6 லட்சத்து 48 ஆயிரத்து 739 ரேஷன்கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள 1,035 ரேஷன்கடைகள் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ரேஷன்கடையிலும் தினமும் குறைந்தபட்சம் 100 பேர் முதல் அதிகபட்சமாக 200 பேர் வரை நிவாரணத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
இதற்காக ரேஷன்கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கினர்.
இதில் நிவாரணத்தொகை பெறுவதற்கு வரவேண்டிய நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.