கிருஷ்ணகிரி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் காரணமாக கலவரம் ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில் தலைமை செயலகம் சென்ற அவர் முதல்-அமைச்சர் அறை முன்பு தர்ணா போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் 5 ரோடு ரவுண்டானா அருகில் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், நகர செயலாளர் நவாப், முன்னாள் நகராட்சி தலைவர் பரிதா நவாப், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர் பஸ் நிலையத்தில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கதிரவன், மாணவரணி அமைப்பாளர் செந்தில், விவசாய தொழிலாளர் அணி ராமமூர்த்தி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை, வக்கீல் மகேந்திரன் உள்பட 25 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி பஸ் நிலையத்திற்கு, கட்சியின் மாவட்ட துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வுமான முருகன் தலைமையில் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த கட்சியினர், பின்னர் பஸ் நிலையத்தில் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முருகன் எம்.எல்.ஏ, ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, சாலம்மா உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் பஸ் நிலையம் அருகே, ஓசூர் நகர செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாதேஸ்வரன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், நகர பொருளாளர் சென்னீரப்பா, மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் கண்ணன், செந்தில்குமார், முருகன் உள்ளிட்ட 28 பேரை டவுன் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இதே போல பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 2 எம்.எல்.ஏ.க்கள், உள்பட 234 பேரை போலீசார் கைது செய்தனர்.