பல மாதங்களாக குடிநீர் பஞ்சத்தில் உழன்று வரும் கேப்டவுன் நகரம் விரைவில் தண்ணீர் இல்லா நகரமாக மாறப்போகும் செய்திதான் அது.
ஆம். தென்ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரான கேப்டவுனில் தண்ணீர் முற்றிலும் தீர்ந்து பூஜ்ஜிய நிலை ஆகும் நாள் (டே ஜீரோ) மே 11-ந் தேதி என கணிக்கப்பட்டு இருக்கிறது.
40 லட்சம் மக்களை தன்னுள் அடக்கியிருக்கிற அந்த நகரம் அவர்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் ஸ்தம்பித்து கிடக்கிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக அங்கு கடந்த 3 ஆண்டுகளாக நீடித்த வறட்சி, நகரின் ஒட்டுமொத்த குடிநீர் வினியோகத்தையும் துடைத்து வருகிறது.
நகருக்கு குடிநீர் வழங்கும் அணைக்கட்டுகளில் நீர்மட்டம் வேகமாக காலியாகிறது. இதன்மூலம் தண்ணீர் இல்லாத உலகின் முதலாவது மிகப்பெரிய நகரம் என்ற மோசமான சாதனையை தன் வயப்படுத்த தயாராகி வருகிறது கேப்டவுன்.
இயற்கை மூலம் ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இந்த பேரிடரில் இருந்து கேப்டவுன் மக்களை காக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ள நிபுணர்கள், முடிந்த அளவுக்கு இந்த பேரிடரை தள்ளிப்போட முயன்று வருகிறார்கள்.