திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் இயற்கை நீர் வளர்ப்பு பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளின் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சங்கீதா சீனிவாசன், திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் ராஜகுமார், நீலவானத்து நிலவன், பாலசிங்கம், தளபதி சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் விவசாயிகளையும் விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டும். வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும்.
கரும்பு நிலுவைத்தொகை
கடந்த 4 ஆண்டு காலமாக தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்காத கரும்பு நிலுவைத்தொகையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் செய்யாமல் தமிழக விவசாயிகளை உடனடியாக அழைத்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டில் ஊழல் நடைபெறுவதால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். கமல் ஹாசனின் சமூக அக்கறையை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போற்றுகிறேன்.
முதல்-அமைச்சர் ராஜினாமா செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. மத்திய அரசின் தலையீட்டால் தமிழக அரசு பலவீனப்பட்டிருக்கிறது என்பதை தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தி வருகிறது. வழக்கமாக பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்து போனதாலும், அண்டை மாநிலங்களுடன் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆற்று நீர் சிக்கல்களாலும் இந்திய அரசு உலக நாடுகளோடு கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களாலும்தான் இந்திய விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலை
வறட்சி காரணமாக தமிழக மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் திட்டமிட்டு ஒரு வறட்சியை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அதனால்தான் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதீ நீர் ஒழுங்காற்று குழுவை அமைக்கவில்லை என்ற சந்தேகம் உள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பொன்னேரி அண்ணாசிலை முன்பு திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி மற்றும் அனைத்து கட்சி விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வேணு தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சதாசிவலிங்கம், முன்னாள் அமைச்சர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.