பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே லாடபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமாரிடம் மனு கொடுத்தனர். அதில்,லாடபுரம் பகுதியில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையானது 1,000 அடி அளவுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரினை எடுத்து வருகிறது. இதனால் லாடபுரம் பகுதிக்கு குடிநீர் வழங்கக்கூடிய கிணற்றிலும், விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் பொது மக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்நிலையில் அந்த தொழிற்சாலையானது நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்து வெளியூர்களுக்கும் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.