பெங்களூரு,
கர்நாடகத்தில் மழை காலம் தொடங்க உள்ளது. இதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்களுடன் மேயர் சம்பத்ராஜ் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மேயர் சம்பத்ராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-
பெங்களூருவில் கடந்த மழை காலத்தின்போது போடப்பட்ட சாலைகளில் அதிகளவில் குழிகள் உண்டாகி இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து, அந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
மேலும் அந்த சாலை பணிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். நாளை(அதாவது, இன்று) மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெறுகிறது. இதனால் வருகிற 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அந்த சாலைகளை நேரில் ஆய்வு நடத்த உள்ளோம். நான், துணை மேயர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் சென்று இந்த ஆய்வு பணியை நடத்த இருக்கிறோம்.
சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகரத்தோனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளில் இதுவரை 45 சதவீதம் வரை நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் அடுத்த ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும்.
மழை காலம் தொடங்க உள்ளதால், பெரிய கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தூர்வாருவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வேகமாக செய்து முடிக்க வேண்டும். மழைநீர் சாலைகளுக்கு வராமல் இருக்க தடுப்புச் சுவர்களும் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் மழை காலத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜூன் 18-ந் தேதிக்குள் நகரில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுவது குறித்து ஐகோர்ட்டு புள்ளி விவரங்களை கேட்டுள்ளது. இதுகுறித்து தேவையான தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வழங்க வேண்டும். சாலைகளில் ஒரு குழி இருக்கக்கூடாது. மழை காலத்தின்போது சாலைகளில் ஏதாவது விபத்துகள் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட என்ஜினீயர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். டெண்டர் சூர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மேயர் சம்பத்ராஜ் பேசினார்.