மாவட்ட செய்திகள்

‘ரெட் அலர்ட்’ எதிரொலி: கொடைக்கானலில் வெறிச்சோடிய சுற்றுலா இடங்கள்

‘ரெட் அலர்ட்’ எதிரொலியாக கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது.

இதற்கிடையே ரெட் அலர்ட்எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் கடந்த 2 நாட்களாக கொடைக் கானல் நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கி கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் நேற்று சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் பிரையண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் நேற்று நட்சத்திர ஏரி வெறிச்சோடியது. சுற்றுலா பயணிகள் வராததால் படகுழாமில், படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக கும்பக்கரை அருவிக்கு செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போது இந்த சாலையில் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்த பிறகு அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து அடர்ந்த மேகமூட்டமும், கடும் குளிரும் நிலவியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை முதல் அவ்வப்போது பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பிற்பகல் 3 மணி அளவில் கொடைக்கானல் பூம்பாறை பிரதான சாலையில் கிருஷ்ணன்கோவில் அருகே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு