மாவட்ட செய்திகள்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை எதிர்த்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

மதுரை,

தேனி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் என்.சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணி 12.4.2018-ல் தொடங்கியது. அன்றைய தினம், விடைத்தாள் திருத்தும் பணியில் போதிய அனுபவம் இல்லாத தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்குனர் மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அமலில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை கைவிடுமாறு ஆசிரியர்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனாலும் கோரிக்கை நிறைவேறும் வரை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளதால் அரசு பள்ளி ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழ் மொழியில் கற்பித்தல் அனுபவம் இல்லாத தனியார், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்களால் பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்ய முடியாது. விடைத்தாள் திருத்தம் செய்ததில் முறைகேடு நடைபெற்றால், அதற்காக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது அரசால் நடவடிக்கை எடுக்க முடியாது.

எனவே, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பான அரசு தேர்வுத்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை மட்டும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு போதிய எண்ணிக்கையில் அரசு ஆசிரியர்கள் இல்லாத நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்துவது தவறல்ல. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது