மாவட்ட செய்திகள்

தாளவாடி அருகே, விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானைக்கூட்டம்

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் யானைக்கூட்டம் புகுந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரையும் யானைகள் துரத்தின.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டருமை, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து 15 யானைகள் மல்லன்குழி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் நேற்று காலை 6 மணி அளவில் புகுந்தன. யானைக்கூட்டத்தை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் குட்டியுடன் யானைகள் வந்திருந்ததால், அவைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் வனத்துறையினரையும், பொதுமக்களையும் துரத்தியது. இதனால் வனத்துறையினரும், பொதுமக்களும் தலைதெறிக்க ஓடினர்.

அப்போது அங்குள்ள ரோடு வழியாக மல்லன்குழி கிராமத்தை சேர்ந்த பாலு என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். மோட்டார்சைக்கிளில் வந்தவரை கண்டதும் யானைகள் ஆவேசம் அடைந்து அவரை துரத்த தொடங்கியது. யானைகள் தன்னை துரத்தியதை கண்டதும், அவர் மோட்டார்சைக்கிளை கீழ தள்ளிவிட்டு அருகில் உள்ள புதர் மறைவுக்குள் சென்று பதுங்கி உயிர் தப்பினார். ஆனால் ஆவேசம் அடங்காத யானைகள், அந்த மோட்டார்சைக்கிளை மிதித்து சேதப்படுத்தியது.

எனினும் பட்டாசு வெடித்தும், தகர டப்பாவால் ஒலி எழுப்பியும் யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினரும், பொதுமக்களும் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 8 மணி அளவில் வனப்பகுதிக்குள் யானைக்கூட்டம் சென்றது. இதையடுத்து வனத்துறையினரும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தென்னை மரங்கள் சேதம்

இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மல்குத்திபுரத்தை சேர்ந்த விவசாயியான சக்திவேல் என்பவரின் தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் புகுந்த யானைகள் அங்கு இருந்த தென்னை மரங்களை முறித்து தின்று நாசப்படுத்தியது.

இதில் 15 தென்னை மரங்கள் சேதமடைந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்