சிவகங்கை,
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட கூட்டம் சிவகங்கையில் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுரவ தலைவர் பிரிட்டோ, பொருளாளர் ராதாகிருஷ்ணன், போராட்டக்குழு தலைவர் ராமசாமி, நிர்வாகிகள் சரவணன், பரமானந்தம், காளஸ்வரி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்களின் விவரம் வருமாறு:- தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு வழங்கிய மானிய தொகை ரூ.6 கோடியே 40 லட்சத்தை சங்க நிர்வாக அனுமதி இல்லாமல் மத்திய கூட்டுறவு வங்கி தன்னிச்சையாக பிற கணக்குகளில் வரவு வைத்துள்ளது. இதனால் தற்போது பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே மானியத்தை முழுமையாக ரேஷன் கடைகளை நிர்வகிக்கும் சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.
நலிவுற்ற சங்கங்களுக்கு வட்டியில்லா நகை கடன் வழங்க போடப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து, தொடர்ந்து நகை கடன் வழங்க அனுமதிக்க வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பாக தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 3 சதவீத கமிசனை இதுவரை மத்திய கூட்டுறவு வங்கி வழங்கவில்லை.
இந்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்வது, பின்னர் தொடர் வேலை நிறுத்தம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.