ஈரோடு,
ஈரோடு எஸ்.கே.சி.ரோடு பகுதியை சேர்ந்தவர் கிஷோர்குமார். இவருக்கு சிவசுதர்சன் (14), ஹரீஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் சிவசுதர்சன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலை வழக்கம்போல் சிவசுதர்சன் பள்ளிக்கூடத்திற்கு சென்றான். அங்கு காலை 9 மணிக்கு உடற்கல்வி வகுப்பு என்பதால் பயிற்சிக்காக மாணவ-மாணவிகள் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மைதானத்திற்கு சென்றனர். அப்போது மாணவர்களை ஓடும்படி உடற்கல்வி ஆசிரியர் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து சிவசுதர்சனும் ஓடினான். அப்போது அவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவசுதர்சனை அங்கிருந்த ஆசிரியர்களும், பள்ளிக்கூட நிர்வாகிகளும் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிவசுதர்சன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சிவசுதர்சனின் உடலை பார்த்து அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.