ஏரல்,
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டறியப்பட்டன.
தொடர்ந்து அங்கு பழங்கால மக்கள் வசித்த வாழ்விடங்களை கண்டறிவதற்காக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் இருந்து கால்வாய் செல்லும் சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்யப்பட்டது. அங்கும் ஏராளமான மண்பாண்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
இதேபோன்று சிவகளை பரும்பு பகுதியின் தென்புறத்தில் உள்ள வலப்பான்பிள்ளை திரட்டில் அகழாய்வு பணி நேற்று தொடங்கியது. பண்டைய தமிழர்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக, அங்கு 4 இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியில் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடமானது பழங்கால மக்களின் இடுகாடாக அறியப்படுகிறது.
எனவே அதன் அருகில் பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தனர்.