சிவகாசி,
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். சம்பவம் நடந்த அறை தரைமட்டமானது.
வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மா காலனியில் தங்கபாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நேற்று 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். மதியம் 12 மணி அளவில் அந்த ஆலையில் உள்ள ஒரு அறையில் பட்டாசுகள் வெடித்து திடீர் என விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த அறை முழுவதும் நொறுங்கி தரைமட்டமானது. அங்கு வேலை செய்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த அரவிந்தன் (வயது 22) என்பவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் இடிபாடுகளுக்குள் கிடந்தது.
உடல் மீட்பு
இதுபற்றிய தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாரனேரி போலீசார் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர். பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து நிகழ்ந்து இருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
காதல் திருமணம்
அரவிந்தனும், சங்கரன்கோவிலை சேர்ந்த அன்னக்கிளியும் (20) காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. மனைவி பிரசவத்துக்காக சங்கரன்கோவில் சென்ற நிலையில் அரவிந்தன் மட்டும் சிவகாசி அருகே மாதாங்கோவில்பட்டி என்ற கிராமத்தில் தங்கி இருந்து பட்டாசு ஆலைக்கு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இந்தநிலையில்தான் அவர் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியான சோகம் நடந்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.