மாவட்ட செய்திகள்

கோவில்களில் கடைகளை காலி செய்ய அவகாசம் நீட்டிப்பு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்ய ஜனவரி மாதம் வரை அவகாசம் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த 19 கடைகள் எரிந்து சாம்பலாயின. வீரவசந்தராயம் மண்டபமும் சேதமடைந்து அதன் பெரும்பகுதி இடிந்து விழுந்தது.

இந்த தீ விபத்தையடுத்து உடனடியாக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தியது.

முடிவில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில் வளாகங்களில் செயல்படும் கடைகளை அகற்றுவது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகங்களில் கடை நடத்தியவர்கள் தங்களது கடைகளை காலி செய்யுமாறு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து கடை உரிமையாளர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வி.பார்த்திபன், தமிழக கோவில்களின் பழமையை பாதுகாக்கும் வகையில் கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை டிசம்பர் 31-ந்தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

மேலும், டிசம்பர் மாதம் வரை கடையை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அதன்பின் கடைகளை காலி செய்து கொள்கிறோம் என்று பிரமாண பத்திரம் எழுதி, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில் போன்ற கோவில்களை சேர்ந்த கடை வியாபாரிகள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், கோவில்களில் இருந்து கடைகளை காலி செய்ய உரிய கால அவகாசம் அளிக்கவில்லை. எங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவும் இல்லை. எனவே டிசம்பர் மாதத்துக்குள் கடைகளை காலி செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் புஷ்பாசத்தியநாராயணா, கிருஷ்ணவள்ளி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில்களின் பழமையை பாதுகாக்கும் நோக்கத்தில் அங்குள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. வேண்டுமானால் கடைகளை காலி செய்ய அளிக்கப்பட்ட அவகாசத்தை வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்கிறோம். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது