பொறையாறு,
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதியில் விவசாயமும் மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. தற்போது காழியப்பநல்லூர் மற்றும் மாணிக்கம் பங்கு ஆகிய ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள் வெள்ளரி, கொத்தவரை, வெண்டை, நாட்டு கத்தரிக்காய், மிளகாய், தர்பூசணி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து உள்ளனர். கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது.
பொறையாறு அருகே பத்துகட்டு கிராமத்தில் விவசாயிகள் நாட்டு கத்தரிக்காய்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இயற்க உரத்த பயன்படுத்தி...
இதுகுறித்து விவசாயி செந்தில் நிருபாகளிடம் கூறுகையில்,
நான் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், மாட்டு சாணம் உரத்தை பயன்படுத்தி, ஆண்டுதோறும் நாட்டு கத்தரிக்காய், வெள்ளரி, கொத்தவரை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறேன். சாணம் உள்ளிட்ட இயற்கை உரத்தின் மூலம் விளைவித்த கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கனிகள் சுவையாக இருக்கும் என்பதாலும், நல்ல வியாபாரம் நடக்கும் என்பதாலும், வியாபாரிகள் என்னை தேடி வந்து காய்கனிகளை கொள்முதல் செய்வர். அதேபோல் இந்த ஆண்டும் இயற்கை உரத்தை பயன்படுத்தி நாட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளேன். விளைச்சல் அமோகமாக உள்ளது. அதனை தற்போது அறுவடை செய்து வருகிறேன்.
நிவாரணம் வழங்க வேண்டும்
அறுவடை செய்த கத்தரிக்காயை மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்வர். ஆனால் கொரோனா ஊடரங்கால் வியாபாரிகள் காய்கனி வாங்க வருவதில்லை. இதனால் அறுவடை செய்த கத்தரிக்காய் வீணாகிறது. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு கிலோ ரூ.20-க்கு சில்லரையாக விற்பனை செய்து வருகிறேன். கத்தரிச்செடி நடவு செய்தது முதல் தண்ணீர் பாய்ச்சியது, களை எடுத்தது, காய் அறுவடை செய்த கூலி ஆகியவற்றை கணக்கு பார்த்தால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் எங்களுக்கு கவலையாக உள்ளது. எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.