திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நேற்று நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், விவசாயிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு வேளாண் திட்டங் கள், மானியங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர், நுழைவு வாயிலில் இருந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பேனரை கையில் பிடித்துக்கொண்டு கோஷமிட்டபடியே குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் கட்டிடம் அருகே வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்தனர். அப்போது விவசாயிகள் அனைவரும் தங்கள் தோளில் இருந்த துண்டை விரித்து கையில் பிடித்து பிச்சையெடுக் கும் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதனைக்கண்ட போலீசார் அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை அவர்கள் சார்பில் சிலர் மட்டும் கூட்டம் நடக்கும் இடத்துக்கு சென்று தெரிவிக்க போலீசார் அனுமதித்தனர். அதன்படி 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்துக்கு கோரிக்கை மனுவுடன் சென்றனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் வேலுவை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கடந்த 2016-ம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு காப்பீடு செய்தனர்.
அந்த ஆண்டே திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை முழுமையாக வழங் கப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த 2017-ம் ஆண்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. டிசம்பர் இறுதிக்குள் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நெல் சாகுபடி செய்த 421 விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீட்டு சந்தா செலுத்திய 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக் கான காப்பீட்டு தொகை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 3 ஆயிரம் பேருக்கும் மட்டும் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பலனாக நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கான காப்பீட்டு தொகை பெறும் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது வரை காப்பீட்டு தொகை எங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
இதையடுத்தே பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்த முயன்றோம். ஆனால் போலீசார் தடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கும்படி கூறினர். ஆனால் இங்கு எங்களுக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றனர்.
இதைத்தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள், விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் கூட்டுறவு வங்கிகளில் 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.200 மட்டுமே உயர்த்தியுள்ளது. எனவே கூடுதல் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகள், விவசாய கடன் தள்ளுபடி கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர். பின்னர் வேடசந்தூர் தாலுகாவை சேர்ந்த ஒரு விவசாயி பேசுகையில், எங்கள் பகுதியில் மயானத்தில் பிணங்களை புதைப்பதற்கு பதிலாக பட்டா நிலங்களில் புதைக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.
ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டியை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கருங்குளத்தில் 4 ஆயிரத்து 500 கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்படாமல் உள்ளது. மரங்களை வெட்டி அகற்ற ஒப்பந்ததாரர் நியமிக் கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை வெட்டி அகற்றப்படவில்லை. இதனால் குளம் வற்றுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு செல்லும் நிலை உள்ளது. அதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர், மரங்களை விரைவில் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.