தஞ்சாவூர்,
தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தாசில்தார்கள் வெங்கடேசன் (தஞ்சை), அருணகிரி (பூதலூர்), கணேஷ்வரன் (ஒரத்தநாடு), நெடுஞ்செழியன்(திருவையாறு) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை செயலாளர் திருப்பூந்துருத்தி பி.சுகுமாரன், கவுரவத்தலைவர் நெடார் தர்மராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் கோவிந்தராஜ், ஆம்பலாப்பட்டு தங்கவேல் உள்ளிட்ட விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர்.
கோஷம்
பின்னர், அரங்கத்துக்கு வெளியே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சுமார் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
அம்மையகரம் ரவிச்சந்தர்: புரெவி புயலால் பல இடங்களில் நெற்பயிர்கள் நீண்ட நாள்கள் மூழ்கியிருந்ததால் தழைச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு மஞ்சள் நிறமாகிவிட்டன. எனவே, மீண்டும் அடியுரம், மேலுரம் என உரச்செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும், பூச்சி பாதிப்புக்கு மருந்து தெளிக்க வேண்டும். இதனால், 30 முதல் 40 சதவீதம் வரை கூடுதல் செலவாகிறது. இதற்குரிய நிவாரணமும், காப்பீடு இழப்பீடுகளையும் வழங்க வேண்டும். பயிர்க்கடன் ஒரு விவசாயிகளுக்கு கூட வழங்கப்படுவது: இல்லை. நகைக்கடன் மட்டுமே தருகிறார்கள்.
வெளிப்படைத்தன்மை
ராயமுண்டான்பட்டி ஜீவகுமார்: பயிர்க்காப்பீடு தொடர்பாக பாதிப்பு விவரங்களைக் கணக்கெடுப்பு செய்யும்போது, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். குறிப்பாக பாதிப்பு விவரங்கள் குறித்து அலுவலர்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளும்போது அக்கிராம விவசாயிகளுக்கு தண்டோரா அல்லது ஒலிபெருக்கி மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு பருவத்துக்கான அரைவை பணியை விரைவில் தொடங்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்- புரெவி புயல் காரணமாக ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தில் ஏராளமான பரப்பில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
படுக்கை அணை
கோனேரிராஜபுரம் ராஜேந்திரன்: குடமுருட்டி ஆற்றிலிருந்து எங்களது பகுதி வாய்க்காலில் 10 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. குடமுருட்டி ஆற்றில் படுக்கை அணை அமைத்தால்தான் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.