மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்துக்கு 3 போலீசாரை அழைத்து வந்து சி.பி.ஐ. விசாரணை நடித்து காட்டியதை வீடியோ பதிவு செய்தனர்

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக கைதான 3 போலீஸ்காரர்களை சாத்தான்குளத்துக்கு அழைத்து வந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் நடித்து காட்டியதை வீடியோ பதிவு செய்தனர்.

தினத்தந்தி

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றனர்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள போலீஸ்காரர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு மதுரை கோர்ட்டு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 7 அதிகாரிகள் 3 கார்களில் சாத்தான்குளம் புறப்பட்டனர். அவர்கள், ஒரு வேனில் சாமத்துரையை மட்டும் அழைத்து சிறிது தூரம் வந்தனர். பின்னர் மீண்டும் வாகனங்களை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு திருப்பி அங்கு இருந்த மற்ற போலீசாரான செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகியோரையும் அழைத்துக் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாத்தான்குளம் புறப்பட்டனர். அவர்கள் மதியம் 1.45 மணிக்கு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் முதலில் காரில் இருந்து இறங்கி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் போலீஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மாலை 3.15 மணிக்கு வேனில் இருந்த 3 போலீசாரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். முதலில் சாமத்துரையிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ஏனெனில் சாமத்துரை கோர்ட்டு ஏட்டாக பணியாற்றி வந்தார். இதனால் அவர் தான் சம்பவத்தன்று ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளார். தந்தை, மகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களின் உடல் நிலை எப்படி இருந்தது, அவர்களை எந்த வாகனத்தில் அழைத்து சென்று ஆஜர்படுத்தினீர்கள்? என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் போலீஸ் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்த போலீஸ்காரர் வெயிலுமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் சம்பவத்தன்று கம்ப்யூட்டரில் பதிவான காட்சிகள், முதல் தகவல் அறிக்கையை எவ்வாறு கம்ப்யூட்டரில் பதிந்தது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீஸ்காரர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தினார்கள். இவர் காயம் அடைந்த தந்தை, மகனை கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அழைத்து சென்றவர் ஆவார். கிளைச்சிறைக்கு சென்றபோது தந்தை, மகன் உடலில் காயங்கள் இருந்ததாக அங்குள்ள ஆவணத்தில் இவர் கையெழுத்து போட்டு உள்ளார். அதுபற்றி அவரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்கள் 3 பேரும் சம்பவம் குறித்து தனித்தனியாக நடித்தும் காட்டினார்கள். அவற்றை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். மாலை 3.35 மணிக்கு 3 பேரும் தனித்தனியாக வேனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையே, மாலை 3 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு வெளியில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்தபடியே மதிய உணவு சாப்பிட்டனர்.

தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் பல்வேறு ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். இந்த பணி மாலை 6.35 மணி வரை நீடித்தது. பின்னர் அவர்கள் அங்கு இருந்து கார்களில் புறப்பட்டு சென்றனர். இந்த விசாரணையையொட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஜெயராஜ் வீட்டில் விசாரணை நடத்தி விட்டு வெளியே வந்த சி.பி.ஐ. அதிகாரிகள். போலீசார் தாக்கியதில் கொல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் வீடு சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவில் உள்ளது. இங்கு ஜெயராஜின் மனைவி, மகள்கள், உறவினர்களிடம் ஏற்கனவே முதற்கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் 4 பேர் நேற்று மாலை 4.10 மணிக்கு திடீரென்று ஜெயராஜ் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் உள்ளே சென்ற உடன் வீட்டின் கதவு பூட்டப்பட்டது. அங்கு இருந்த அவரது உறவினர்களான தேசிங்ராஜா, தாவீது, ஜோசப் ஆகிய 3 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதாவது இவர்கள் 3 பேரும் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் சரியாக இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி அவர்களிடம் எழுத்து மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் மாலை 6.10 மணிக்கு விசாரணையை முடித்துக் கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சாத்தான்குளம் போலீஸ் நிலையம் சென்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது