இயல்பு நிலை
வங்கக்கடலில் உருவாகி இருந்த புரெவி புயல் சின்னம் காரணமாக கடந்த 9 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புயல் சின்னம் கரையைக் கடந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதுடன் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதையடுத்து ராமேசுவரத்தில் இருந்து 9 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 600-க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பலவகை மீன்களுடன் கரை திரும்பினார்கள்.
இதில் ஒவ்வொரு படகிலும் சங்காயம் ஒரு டன், ஒரு சில படகுகளில் பேசாலை மீன்கள் 2 டன், விலை உயர்ந்த இறால் மீன்கள் 60 முதல் 80 கிலோவும் சாலை, தடியன், குமுலா, கணவாய் உள்ளிட்ட மீன்களும் கிடைத்திருந்தன. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க சென்று நேற்று கரை திரும்பியதை தொடர்ந்து மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்துடன் களை கட்டியது.
ஏமாற்றம்
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் கூறும்போது, வங்கக்கடலில் உருவாகிஇருந்த 2 புயல் சின்னத்தால் அதிக அளவில் மழை பெய்தது. கடலில் அதிக அளவில் மழை நீரும் சேர்ந்ததால் வழக்கத்தைவிட அதிக மீன்கள் கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தோம். 9 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்று வந்ததில் ஒவ்வொரு படகிலும் கணவாய், இறால் உள்பட மற்ற மீன்கள் வரத்து மிக மிக குறைவுதான். அதுபோல் மீனவர்கள் பிடித்துவரும் இறால் மீன்களும் தொடர்ந்து குறைவான விலையிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.