புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேர்மையாகவும், தொழில் ரீதியாகவும் பணியாற்றக்கூடிய அஸ்வனி குமார், அன்பரசு ஆகிய 2 திறமையான அதிகாரிகளை புதுச்சேரி அரசு நிர்வாகம் பெற்றுள்ளது. வளர்ச்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அன்பரசுவிடம் பொதுப்பணி, கல்வி, வேளாண்மை, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், தீயணைப்பு ஆகிய துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் அரசு நிர்வாகம் கடந்த 18 மாத காலமாக இருந்ததைவிட இவர்களின் பணி வேறு விதமாக இருக்கும். மக்களின் குறைகளையும், தேவைகளையும் நிறைவேற்ற சட்ட விதிகளுக்கு மதிப்பளித்து செயல்படுவார்கள். உத்தரவுகளைவிட உதாரணமாக வாழக்கூடியவர்கள். இருவரும் நற்பெயருடனும், நல்ல அனுபவங்களுடனும் புதுச்சேரியில் பணியாற்ற வந்துள்ளனர். இந்த வகையிலான அதிகாரிகள் புதுச்சேரிக்கு தற்போது தேவையாக உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ள இந்த நேரத்தில், மத்திய அரசு கணிசமான நிதியை வழங்க இருப்பதால் ஊழல், நிதி இழப்பின்றி அந்த திட்டம் நிறைவேற இதுபோன்ற அதிகாரிகள் தேவை. புதுச்சேரியில் ஊழல் இல்லாமல், நிதி இழப்பு, நிதியை திசை திருப்புதல் மற்றும் ஒழுங்கற்ற நியமனங்கள் இல்லாமல் இருக்கும் வகையில் பணியாற்றி இருவரும் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் நிதி நிலையில் ஆரோக்கியமான நிலையும், வளர்ச்சியையும், செழுமையையும் புதுச்சேரியில் அவர்கள் கொண்டுவர வேண்டும்.
அவர்கள் அனைத்து துறைகளிலும் செய்ய வேண்டிய திருத்தங்களை துரிதமாக கொண்டு வந்து, புதுச்சேரியை மேம்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே இருவரையும் வரவேற்கிறேன். இந்த திருத்தங்களை செய்து செழுமையை கொண்டுவருவதற்கு முன்பு அவர்கள் இருவரும் புதுச்சேரிக்கு கிடைத்திருப்பது ஆசீர்வாதமாக கருதுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.