கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேல கொட்டையூரில் உள்ள அரசு கவின் கலை கல்லூரியில் ஓவியங்கள்-சிற்பங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அருள்தாசன் தலைமை தாங்கினார். சென்னை அரசு கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திர சேகரன் கண்காட்சியை திறந்து வைத்தார். தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், சிற்பி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய சிற்பங்கள், ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வருகிற 6-ந் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. விழாவை தொடர்ந்து மணியரசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கும்பகோணம் அரசு கவின் கல்லூரி மிகவும் பழமையான கல்லூரி ஆகும். இந்த கல்லூரியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கு அவர்கள் பெறும் பயிற்சியால் மட்டுமே முடியும். அதற்கு சிறந்த ஆசிரியர்கள் தேவை.
ஆனால் இந்த கல்லூரியில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை அரசு நிரப்புவதுடன், நிதி உதவியும் தாராளமாக வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் சிறந்த படைப்பாளிகளை உருவாக்க முடியும். ஓவியர்கள் மீது தமிழக அரசு கவனம் செலுத்துவதில்லை.
மேற்குவங்க மாநிலத்துக்குள் நுழைந்த சி.பி.ஐ. அதிகாரிகளை, அந்த மாநில முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி உள்ளார். அவரிடம் இருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு பாராட்டுக்கள்.
மற்ற மாநில முதல்-அமைச்சர்களுக்கு மம்தா பானர்ஜி எடுத்துக்காட்டாக திகழ்கிறார். மாநிலத்துக்குள் நுழைந்த சி.பி.ஐ. அதிகாரிகளை தடுத்து நிறுத்திய அவர் தன்மானம் கொண்ட முதல்-மந்திரி ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.