தானே,
தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த 6 மாதமாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்தான்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சிறுவன் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இருப்பினும் சிறுவன் அந்த சிறுமியுடனான பழக்கத்தை கைவிடவில்லை.
இதுபற்றி அறிந்த சிறுமியின் உறவினரான அஜய் ராம்கிரண் யாதவ்(வயது20) என்பவர் கடும் ஆத்திரமடைந்தார். சிறுவனை கொலை செய்ய திட்டமிட்ட அவர், அவனை நைசாக பேசி தான் வேலை பார்க்கும் தாபோடி கிராமத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுவனை கொடூரமாக கொலை செய்த வாலிபர், பின்னர் அவனது உடலை அங்குள்ள பைப்லைன் கீழே வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்.
இந்தநிலையில் மகனை காணாமல் தேடி அலைந்த சிறுவனின் தந்தை நார்போலி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு சிறுவனை தேடிவந்தனர்.
இந்தநிலையில் தபோடி கிராமத்தின் பைப்லைன் அருகே ஒரு சிறுவனின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அது காணாமல் போன சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுவனை அஜய்ராம்கிரண் யாதவ் கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்ததது. இதையடுத்து நாலச்சோப்ராவில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.