சென்னை,
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத காரணத்தினால், அங்கு நோய்த்தொற்று பரவிவிடக்கூடாது என்பதற்காக அரசு தரப்பில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா நோய்த்தொற்று சமூக பரவலை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்(சி.எம்.டி.ஏ.) சில முடிவுகளை எடுத்து இருக்கிறது. இதுகுறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர்-செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்கள் வர தடை
* கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வர தடை செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு தற்போது நடைபெற்று வரும் சில்லரை விற்பனை முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.
* சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அந்தந்த பகுதிகளில் உள்ள திறந்தவெளி மைதானம் மற்றும் பஸ் நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பூ, பழ மார்க்கெட் மாதவரத்துக்கு மாற்றம்
* கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மார்க்கெட் மற்றும் பழங்கள் அங்காடி 30-ந்தேதி(நாளை) முதல் மாதவரம் பஸ் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை விற்பனை செய்ய வழிவகை செய்யபப்பட்டு இருக்கிறது.
* கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி மற்றும் உணவு தானியங்கள் ஏற்றிவரும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களின் வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்களை இறக்கிய பின் வெளியேற்றப்படும்.
* காலை 7.30 மணி வரை வியாபாரிகள் சில்லரை விற்பனைக்கு காய்கறி வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
* தற்போது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் லாரிகள் மற்றும் வீட்டு வினியோக நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காய்கறி வினியோகம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.